
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே இலங்கையில் விசாரணைகளைக் கோருவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டி-8 மாநாடு தொடர்பில் நடைபெற்ற இணையவழி ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் போது, இலங்கை மீதான ஐநா தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்ததற்கான நியாயப்படுத்தல்களையும் வெளியுறவு அமைச்சர் எ.கே. அப்துல் மொமென் முன்வைத்துள்ளார்.
அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே, பங்களாதேஷ் பின்பற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் இந்து தமிழர்களுக்கு ஒரு சுயாதீன நிலத்திற்காகப் போராடிய, போர்க்குணம் மிக்க, பிரிவினைவாத குழுவே, தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் பயிற்சிபெற்ற இராணுவம் மற்றும் கடற்படைகளைக் கொண்டிருந்தது. அவ்வாறாயின் அது ஒரு யுத்தம்.
அத்தோடு, இலங்கை அதன் சொந்த விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் அதிகமான உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இப்போது, இதுபோன்ற விசாரணைகளுக்கான கோரிக்கைகளையும் அவர்களே முன்வைத்து வருகின்றனர்”
என்றும் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.