November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சேவகர் ஒருவரை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றனர்”: ஆயரின் மறைவு குறித்து பலரும் இரங்கல்

மன்னார் மறைமாவட்டத்தின் மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு அரசியல்வாதிகள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் அதேவேளை, அவரின் மறைவு குறித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆயரின் மறைவால் ”மக்கள் சேவகர் ஒருவரை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றனர்” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆயர் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போதும் இராயப்பு ஜோசப், வெறுமனே இறைபணியுடன் மட்டும் நின்றுவிடாது மக்கள் பணியில் ஈடுபட்டு, அனைவரும் இந்ந நாட்டின் குடிமக்களாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் நேரிய வழிகாட்டியாக வாழ்ந்து எம்மையெல்லாம் அரவணைத்துச் சென்ற ஆண்டகை ஆவார் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு ”கத்தோலிக்க திருச்சபைக்கும், தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசு தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை யுத்தம் மூலம் 2009 மே 18 இல் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்க முயன்றபோதும், மக்களுக்கு நீதியைக் கோரி, சர்வதேச பொறுப்புக்கூறலை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தி, தமிழ் சிவில் சமூக அமையத்தினூடாக ஆண்டகை தலைமையை வழங்கியிருந்தார் என கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

ஆயரின் மறைவுக்கு பின்னர் அவரின் வெற்றிடத்தை நிரப்புவது என்பது கடினமான பணியாகும் என்றும் ஈழத்து திருச்சபையின் பணியாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஆண்டகையின் வாழ்வும் குருத்துவமும் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன்

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. யுத்தம் கோரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னியில் தமிழ் மக்கள் பொருளாதார தடைக்குள் சிக்கியிருந்த நேரத்தில் அந்த மக்களின் உரிமைக்குரலாக செயற்பட்டவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையாவார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சகல தமிழ்த் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இன்ப, துன்பங்களில் பெரும் பங்காளராக அவர் திகழ்ந்தார்.

அன்னார் மறைந்தாலும் அவர் எப்போதும் ஈழத் தமிழ் பேசும் மக்கள் மனங்களில் வாழ்வார் என்பது திண்ணம் என்று விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ் சிவில் சமூக அமையம்

ஆயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு எமக்கும் தமிழ்த் தேசத்திற்கும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் முதல் அழைப்பாளருமான ஆயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.

தனது ஆயர் பணியின் பெரும் பகுதியினை யுத்தத்திற்கு மத்தியில் ஆற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அப்போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக அஞ்சாமல் குரல் கொடுத்த அதேவேளை அந்நேரத்தில் தனது அருட் பணி மூலமாக பலருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் உதவியும் செய்தார் என தமிழ் சிவில் சமூக அமையம் குறிப்பிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் ஆயரின் அர்பணிப்பான மாபெரும் பணிக்காக எமது இறுதி வணக்கங்களையும் நன்றிகளையும் நாம் கூறிக் கொள்வதுடன், இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பாதையில் தமிழ் சிவில் சமூக அமையம் தொடர்ந்து தனது பணிகளை ஆற்றும் என்பதனையும் உறுதி படத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அடக்கப்பட்ட நேரத்திலும் ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

போரின் போதும் போரிற்குப் பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களிற்காக ஓங்கி ஒலித்த ஒரு குரல் போரில் நசுக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட அல்லது காணாமல்போனோரின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கிட்டு சர்வதேசத்திற்கும் ஆணைக்குழுக்களின் முன்பும் பகிரங்கமாகவே சாட்சியம் அளித்த ஒருவர்.

எமது மக்களின் இன்னல்களுடன் அனைத்து வழிகளிகளும் பாடுபட்டதோடு அவை தொடர்பில் எமக்கு காலத்திற்கு காலம் உரிய ஆலோசணைகளையும் வழங்கி வந்த ஒருவரை இழந்து நிற்கின்றோம்.

இலங்கை கத்தோலிக ஆயர் பேரவைக்கு சட்ட ஆலோசகராக நான் செயல்பட்ட காலத்தில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையுடனான உறவு மேலும் அதிகரித்தபோது என்றுமே மக்களின் விடயங்களிலேயே அதிக கரிசணை கொண்டவராக காணப்பட்ட ஆயர் நோய் வாய்ப்பட்ட பின்பும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என இரவு பகலாக முயற்சித்தார். அதனால் இன்று அவரை இந்த முயற்சியில் இருந்து நிரந்தரமாக விடுவித்துள்ளது.

இவ்வாறு தனது இன மக்களிற்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ் நாளின் பெரும் பங்கை அர்ப்பனித்து செயல்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த முடியாத துயருமாகும் இதனால் ஆயரின் பிரிவால் துயருற்ற அனைவருக்கும் விசேசமாக கத்தோலிக்க மக்கலிற்கும் எனது இரங்கலை காணிக்கையாக்குகின்றேன் என்றார்.