மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் அடக்கம் செய்யும் நாளை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் திங்கட்கிழமை வரை தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு இராயப்பு ஜோசப் ஆண்டகை,யுத்த காலத்தில் இன, மத , மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர். அவரது இழப்பானது எமது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் ஓடி ஓடி உழைத்தவர்.
தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்தவர்’ எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே ஆயரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அனைத்து மக்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்.
இதேவேளை மன்னார் ஆண்டகையின் இறுதி நல்லடக்க நாளான திங்கட்கிழமையை துக்க நாளாக அறிவிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.