மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது, அரசாங்கத்திற்கு 3698 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கை தொடர்பிலும் பிணை வழங்க வேண்டாம் என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலுமான உத்தரவு இன்று அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.
இதற்கமைய இன்றைய தினம் பிணை வழங்குவது தொடர்பான கோரிக்கை ஆராய்ந்த அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு இன்று பிணை வழங்கியுள்ளது.
இதேவேளை இவர்கள் 7 பேருக்கும் வெளிநாட்டு பயண தடையை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.