மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
1940 ஏப்ரல் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்த இராயப்பு ஜோசப், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்கக. பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 1967 ஆம் ஆண்டில் யாழ். மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இராயப்பு ஜோசப் 1992 ஆம் ஆண்டில் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்றார்.
தொடர்ச்சியாக 25 வருடங்களாக மன்னார் மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய அவர், யுத்தக் காலத்தில் மக்களுக்கு பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார்.