July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேச நிபுணர் குழுவுக்கு அனுமதி கிடையாது’

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேச நிபுணர் குழுவுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் அரசு முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

“இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானம் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தொடர்பில் பல போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை இலங்கை மக்களின் ஆணைக்கு முரணானது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கான இராஜதந்திரிகள் தொடர்பில் தற்போது மாறுபட்ட பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இவ்விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்தும்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிக்கின்றமை ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஜெனிவா விவகாரம் தொடர்பில் பேச்சை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் அரசும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஜெனிவா விவகாரத்தை எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து விசேட பொறிமுறையை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாதக மற்றும் பாதகமான அறிக்கைகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்படும்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேச நிபுணர் குழுவுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது”என்று அவர் மேலும் தெரிவித்தார்.