July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘2015ல் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியது’: மங்கள சமரவீர

2015 ஆம் ஆண்டு ஐநா பேரவையில் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணையவழியாக அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தோடு 30/1 பிரேரணையை முன்வைத்து, சர்வதேச விசாரணையில் இருந்து நாட்டை மீட்டிருக்காவிட்டால், இன்று இலங்கையின் நிலை மிக மோசமாகியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார, அரசியல் ரீதியில் இலங்கை மிகப் பயங்கரமான நெருக்கடியொன்றை சந்தித்துள்ளதாகவும், இனியும் நாம் கிணற்றுத் தவளைகளாக இருக்க நேர்ந்தால், நாடு மிகப் பெரிய பொறியில் சிக்கிக்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா விவகாரம் இன்று இலங்கைக்கு எதிராக உருவாகுவதற்கு, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் போர்க் குற்றசாட்டுக்கள் குறித்து ஆராயவும், விசாரணைகளை நடத்துவதற்கும் ராஜபக்‌ஷ அரசாங்கம் பாங்கீன் மூனுடன் செய்துகொண்ட இணை ஒப்பந்தமே காரணம் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

“2014 ஆம் ஆண்டு பிரேரணை தொடர்ந்திருந்தால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, ஒரு சிலருக்கு எதிராக தண்டனை நிறைவேற்றவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

எனினும், போர்க் குற்றசாட்டுக்கள் இருப்பின், அவற்றை உள்ளக நீதிமன்ற பொறிமுறையில் கண்டறிவோம் எனவும், நாட்டில் சுயாதீன நீதிமன்றம் உருவாக்கப்படும் எனவும் நாம் வாக்குறுதியளித்தோம்.

அதேபோன்று, செப்டம்பர் வரையில் கால அவகாசத்தைப் பெற்று, எமக்கான பிரேரணை ஒன்றை உருவாக்கி, நாம் எவ்வாறு இந்த செயற்பாடுகளை கையாளப்போகின்றோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்து, தப்பித்துக்கொண்டோம்”

எனவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.