ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினூஷ தசநாயக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்குத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, 7 மில்லியன் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதற்கமைய தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் இன்று அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேனவுக்கும், ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளைத் தயாரிக்கும் ரஷ்ய நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, முதல் தொகுதி தடுப்பூசிகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் மே முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மிகுதி தடுப்பூசிகளை வழங்க ரஷ்ய நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தினூஷ தசநாயக தெரிவித்துள்ளார்.
உலகில் முதலாவதாகப் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் வி’, தற்போது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்தானது, 91.6% பயனளிப்பதாக ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.