January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை; நாடு முழுவதும் தபால் சேவை ஸ்தம்பிதம்

தபால் சேவை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் இன்று (புதன்கிழமை) மூடப்பட்மையால் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் இந்த சுகயீன தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து மாவட்டத்திலுள்ள தபாலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக பொதுமக்கள் தமது வழமையான தபால் சேவையைப் பெறமுடியாது திரும்பிச் சென்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, பிரதான தபாலகங்கள் திறக்கப்படாமையால் கிளிநொச்சியில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

உப தபால் நிலையங்கள் வழமை போன்று இயங்கிய போதிலும், பிரதான தபாலகங்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள் ஒருநாள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தபாலகங்களில் பெற்றுக்கொள்ளவேண்டிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் சிரமங்களை எதிர்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனினும், விடுமுறை இரத்து செய்யப்பட்ட போதிலும் போராட்டம் தொடரும் என கூட்டு தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய  பரிவர்த்தனையிலிருந்து தபால்களை அனுப்புதல் மற்றும் பெறும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, அரசாங்கம் தபால் ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், சாதாரண தொழிற்சங்க நடவடிக்கை பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.