ஐநா விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா நிலைமைகளை மதிப்பிடுவதில் இலங்கை அரசாங்கம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தின் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய ஐநா தீர்மானத்தில் யுத்த கால பொறுப்புக்கூறல்களைவிட, இராணுவமயமாக்கல் உட்பட 2019 க்குப் பின்னரான காலம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்துவதற்குப் பதிலாக ராஜபக்ஷ அரசாங்கம் 600 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்த கருணாவுக்கு உயர் அரசியல் பதவி வழங்கியதாகவும் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், கொழும்பு பிரிட்டன் தூதரகத்தின் இறுதி யுத்தத்தின் போதான இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் கோரியுள்ள நிலையில், ‘இலங்கையில் ஆதாரங்களை ஆராயும் ஐநா புதிய பிரிவு, அனைத்து வகையான தகவல்களையும் கண்டறிவதில் எவ்வித சர்ச்சையும் இருக்காது’ என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.