July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் ஹேக்கிங் கொள்ளை; இலங்கையில் வைப்பிலிட உதவியதாக யாழிலும் ஒருவர் கைது

அமெரிக்காவில் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து கொள்ளையடித்த பணத்தை இலங்கையில் வைப்பிலிட உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் யாழ்ப்பணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் இவரின் வங்கிக்கணக்கிற்கு ரூ. 13.4 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள பல நபர்கள் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணத்தை திருடியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அங்கு வங்கிக் கணக்குகளில் இருந்து கொள்ளையிடப்படும் பணத்தை, அவர்கள் இலங்கையில் உள்ள பல நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுகிறார்கள். பின்னர் ஹேக்கர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை திரும்பப் பெறுவதுடன், இந்த மோசடிக்கு உதவும் உள்ளூர் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு தொகையையும் கொடுக்கிறார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேபோன்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சிஐடியினால் கைது செய்ப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபரின் தனியார் வங்கி கணக்கில் ரூ. 17.2 மில்லியன் ரூபா அமெரிக்காவிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தார்.

2020 ஏப்ரல் மாதம் முதல் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களின் பல வங்கிக் கணக்குகளில் 140 மில்லியன் ரூபா வரை வைப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, முறைப்பாடுகளுக்கு அமைய இலங்கையில், 2020 ஏப்ரல் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பண மோசடியில் ஈடுபட்ட 36 க்கும் மேற்றபட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருகின்றது.