“20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்” என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் ஊடகங்களிடம் பேசிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை கூறினார்.
“நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகவே எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கினார்கள். அதனை நிச்சயம் செய்வோம். அதற்கு முன்னதாக தற்காலிக ஏற்பாடாக 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
19ஆவது திருத்தத்தால் நாடு அழிவை நோக்கி பயணித்ததாகவும், ஜனாதிபதியாலும் பிரதமராலும் இணைந்து செயற்படமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறிய ரணதுங்க, சுயாதீனம் என்ற போர்வையில் பழிவாங்கல்களுக்காக ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“இந்தப் பிரச்சனைகள் 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்கப்படும். ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 4 வருடங்களே உள்ளன. இக்காலப் பகுதியில் நாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றார் அமைச்சர்.
“ஆளும்கட்சி வசம் மூன்றிலிரண்டு பலம் உள்ளது. எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லை. வெளியில் இருந்து சிலர் வந்து இணைந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை” என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஆளும் கூட்டணிக்குள் மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அமைச்சரின் இந்தக் கருத்து வந்துள்ளது.