November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விதைக்கக் கூடிய புதியவகை பேனையைக் கண்டுபிடித்த இலங்கை மாணவி

சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் விதைக்கின்ற புதியவகை பேனையொன்று சுற்றாடல் அமைச்சரினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கண்டி புஷ்பதான மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சச்சினி கிறிஸ்டினா என்ற மாணவியும், அவருடைய தந்தையான சுகிர்தனும் இந்த புதிய பேனையை கண்டுபிடித்துள்ளனர்.

சச்சினி கிறிஸ்டினா தயாரித்த இப்பேனையின் மிக விசேட தன்மையானது இப்பேனையை பயன்படுத்தி முடிந்த பிறகு அதனை விதைக்கவும் முடியும் என்பதாகும்.

நாளுக்கு நாள் சுற்றுச் சூழலில் குவியும் பிளாஸ்டிக்கின் அளவை குறைத்துக் கொண்டு சுற்றாடலுக்கு மரக்கன்றுகளையும் தரக்கூடிய தயாரிப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சச்சினி கிறிஸ்டினா கருத்து தெரிவிக்கையில்;

“நானும் எனது தந்தையும் இணைந்து, சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பேனையை தயாரித்துள்ளோம். இந்தப் பேனையின் விசேட தன்மை குறித்து பேசினால், இந்தப் பேனை 96 சதவீதம் சுற்றுச் சூழலுக்கு ஏதுவானது. சுற்றாடலில் அதிகரிக்கும் பிளாஸ்டிக்கின் அளவை குறைப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. நாம் இந்தப் பேனை தயாரிப்பில் மரக்கறி விதைகள், பலசரக்கு பொருட்களின் விதைகள், பூக்களின் விதைகள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளோம். அதனால் இந்தப் பேனையை பயன்படுத்திய பின்னர் அதனை பயிரிட முடியும். தற்போது இதற்கான பேட்டன் உரிமை காத்திருப்பு பட்டியலிலேயே உள்ளது” என தெரிவித்தார்.

இதனிடையே, சச்சினி கிறிஸ்டினாவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பேனையை அறிமுகம் செய்து வைக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டார். இதில் கலந்துகொண்டு அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு தெரிந்த அளவில் உலகில் முதல் முறையாக இவ்வாறான ஒரு பேனை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று எமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சுற்றாடலில் அதிகரிப்பதாகும்.

பாடசாலைகளில் மாத்திரம் நாள் ஒன்றுக்கு 60 முதல் 80 கிலோ கிராம் பயன்படுத்தப்பட்ட பேனைகள் குப்பைகளாக அகற்றப்படுகின்றன. நாம் இந்த மாணவிக்கும், அவருடைய தந்தைக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். பாடசாலை பராயத்தில் இம்மாணவி இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பை நாட்டுக்கு வழங்கியது மிக முக்கிய ஒரு விடயமாகும் என தெரிவித்தார்.