November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிங்கராஜா வனம் தொடர்பில் யுனெஸ்கோவை விட நாட்டின் சட்டம் தான் இறுதி முடிவெடுக்கும்’

சிங்கராஜா வனத்திற்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட  திட்டத்திற்கு யுனெஸ்கோவின் அனுமதியை நாடுவதாக அரசாங்கம் கூறிய போதிலும், நாட்டின் சட்டங்களிலிருந்து அதற்கான அனுமதி ஒருபோதும் கிடைக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஐக்கிய நாடுகள் சபையும், அவற்றின் அனைத்து துணை அமைப்புகளும் நாட்டின் இறையாண்மையை அங்கீகரித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும்.யுனெஸ்கோ என்ன முடிவு செய்தாலும், சிங்கராஜா மழைக்காடுகளுக்குள் எந்தவொரு செயலையும் முன்னெடுக்க முடியாது என நாட்டின் சட்டம் கூறியுள்ளதுடன், அதை தடைசெய்துள்ளது.

அதுமாத்திரமன்றி, சிங்கராஜா மழைக்காடுகளுக்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக நாட்டின் சட்டங்களுக்கு முரணாக அரசாங்கம் செயல்படுவதாக குற்றம்சுமத்திய அவர், 1988ஆம் ஆண்டின் தேசிய வனப்பகுதி பாரம்பரிய பகுதிகள் சட்டத்தின் கீழ் சிங்கராஜா மழைக்காடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

அத்துடன், குறித்த சட்டம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.இது சிங்கராஜா காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சிங்கராஜா மழைக்காடுகளுக்குள் இந்த திட்டத்தை தொடர்வதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்த நாட்டின் சட்டங்களுடன் நேரடியாக முரண்படுகின்றன. அத்துடன், இயற்கை சூழலுடன் காணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புகள் நாட்டின் சட்டங்களால் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளுக்கிடையில் உள்ள உறவுகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

குறிப்பாக, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், கியோட்டோ நெறிமுறை மற்றும் ரியோ +20 உச்சிமாநாடு உள்ளிட்ட பல சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் நிபந்தனைகள் மதிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, இந்த நாட்டிற்கு எதிரான இந்த கொடூரமான குற்றத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

அதுமாத்திரமின்றி, இந்தப் போராட்டத்திற்கு முன்னிலை வகிக்க நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்த ருவான் விஜேவர்தன, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்தை அரசியல்மயமாக்காமல் ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.