இலங்கை மீது சுயாதீன, சர்வதேச விசாரணையைக் கோர கனேடிய அரசாங்கம் தவறிவிட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கனேடிய எதிர்க்கட்சியின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான மைக்கல் சொங் மற்றும் சர்வதேச அபிவிருத்தி, மனித உரிமைகளுக்குப் பொறுப்பான கார்னட் ஜீனியஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை கனடா ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை மீதான இன அழிப்புக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வந்தாலும், ட்ரூடோ அரசாங்கம் அதனை ஆதரிப்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கையில் தமிழ்- முஸ்லிம் மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், மனித உரிமை நிலைமைகள் குறித்து தாம் கவலை அடைவதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலுக்கு முன்னர் கனேடிய அரசாங்கம் ‘ஐநா பேரவையில் இலங்கையின் இன அழிப்பு செயற்பாடுகள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோருவதாக’ பிரேரணை நிறைவேற்றிய போதிலும், இலங்கை மீதான தீர்மானத்தில் அது செயற்படுத்தப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.