இலங்கையில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியதையடுத்து பெற்ற பணத்தை விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுப்பட்ட வெலிவேரிய பொலிஸ் நிலைய, நானாவித முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிவேரிய பொலிஸ் நிலையத்தை அண்மித்த உணவகம் ஒன்றில் 10 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொள்ளும்போதே இவ்வாறு அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர் இரண்டு 5,000 ரூபா நாணயத்தாள்களை விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் விழுங்கிய பணத்தை வெளியே எடுப்பதற்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கம்பஹா பிரதான நீதிவான் மஞ்சுள கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ஏப்ரல் 8 ஆம் திகதி சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் கம்பஹா பிரதான நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.