முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹொரகொல்லையில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு பல மணிநேரம் சுதந்திரமாக நடமாடி வீட்டில் உள்ள பொருட்களை ஆராய்ந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் எந்தவொரு பொருளையும் கொண்டு செல்லவில்லை. இதன்காரணமாக அவர்களின் நோக்கம் திருடுவது இல்லை என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் ஹொரகொல்லை வீட்டிற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஒரு அசம்பாவிதச் செயலுக்கான ஒரு ஒத்திகையாக இது இருக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ள அவர், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
அவருடைய வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். அது சந்தேகத்துக்கு இடமானது. அவ்வாறான சம்பவத்துடன் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையானது முரண்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவுக்கு இடம்பெற்றதைப் போல, அவருக்கும் (சந்திரிகா) இடமளிக்கமுடியாது. அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில், பாராளுமன்றத்திலும் அண்மையில் குமார் வெல்கம உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.