இலங்கையில் வேலையற்றோர் விகிதம் கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த வேலையற்றோரில் இளைஞர் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய நாட்டின் வேலையற்றோர் வீதம் 5.8 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை – செப்டம்பர் காலப்பகுதியில் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் மொத்தம் 486,524 பேர் வேலையில்லாதோர் பட்டியலில் இருந்துள்ளனர்.
கொரோனா முடக்கத்திற்கு பிந்தைய காலப்பகுதியான 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இந்தக்காலப்பகுதியில், அனைத்து வயதுகளிலும் அதிகமாக பெண்கள் வேலையற்றவர்களாக இருந்தனர்.
இதற்கமைய பெண்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 8.6 சதவீதமாகவும் ஆண்களுக்கு இது 4.3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
15 – 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் வேலையின்மையானது 25.9 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது அனைத்து வயதினரிடையேயும் அதிகபட்ச வேலையின்மை விகிதமாகும்.
“படித்த ஆண்களை விட படித்த பெண்களின் விடயத்தில் வேலையின்மை பிரச்சினை மிகவும் கடுமையானது.இது முந்தைய கணக்கெடுப்பு முடிவுகளிலும் தொடர்ந்து காணப்பட்டது” என்று மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.