July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநா தீர்மானத்தில் இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜெர்மனி தமிழர்களைத் திருப்பி அனுப்புவது கவலையளிக்கிறது’

இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜெர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பல தனிநபர்களும், அமைப்புக்களும் தடை செய்யப்படுகின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஜெர்மனி அங்கிருக்கின்ற தமிழர்களை திருப்பியனுப்ப முனைவது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெர்மனியில் இருக்கின்ற தமிழர்கள் இப்போதைக்கு இலங்கையில் வந்து வாழ முடியாத சூழ்நிலை இருப்பதை ஜெர்மனியும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெர்மனி, இந்த நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்து, தீர்மானத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.