கொழும்புத் துறைமுக நகரத்தின் நிர்வாகம் ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட ஆணைக்குழு மூலமே நடத்திச் செல்லப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, சீன முதலீட்டில் அமையவுள்ள கொழும்புத் துறைமுக நகரத்தின் நிர்வாகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நகரத் திட்டம் இலங்கையை ஆசியாவின் வர்த்தக மையமாக மாற்றும் என்பதுடன் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதன் நிர்வாகம் தொடர்பாக குழப்பமடையத் தேவையில்லை எனவும், ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட ஆணைக்குழுவே அதனை நிர்வகிக்கும் என்றும் அமைச்சர் கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார்.