February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவை நிதியைக் கோரி மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதி இதுவரையில் வழங்கப்படாத நிலையில், குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ். வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவன தலைவர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, பிரதான வீதியின் ஊடாக மன்னார் பஸார் வரை சென்றடைந்துள்ளது.

போராட்டத்தைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கான மகஜரை, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

“எமது துன்பங்களை உளப் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அணுகி, அனைத்து வீட்டுத் திட்ட பயனாளிகளினதும் நிலுவைக் கொடுப்பனவுகளை காலம் தாழ்த்தாது பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்” என்று பிரதமருக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.