சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் தடுப்பூசி நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4500 சீனப் பிரஜைகளுக்கு முதற்கட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக அரசாங்கம் காத்திருக்கிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
4 ஆம் கட்ட மருத்துவ சோதனை குறித்த முடிவுகள் கிடைக்காத நிலையில், சினோபார்ம் தடுப்பூசியை உலகளவில் பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யவில்லை.
இதனிடையே, சினோபார்ம் தொடர்பான மருத்துவ ஆய்வு அறிக்கையை சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பதில் சிக்கல் நிலவுவதாக குறிப்பிட்ட அமைச்சர், அதன் ஆங்கில பிரதி கிடைக்கப்பெற்றவுடன் அந்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.