யாழ்ப்பாணத்தில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழில் அதிகரிக்கும் கொரோனா தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா பரவலையடுத்து மாநகரத்தில் பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டதனால் வர்த்தகர்களும் பொது மக்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு வர்த்தகர்களிடமிருந்து 1000 இற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் அவற்றின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இவை தொடர்பில் பல முறைப்பாடுகள் வர்த்தகர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நான் பொது சுகாதார வைத்திய அதிகாரியுடன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புது வருடம் அண்மிக்கின்ற நிலையில் விரைந்து வர்த்தக நிலையங்களை திறக்க வேண்டும் என்ற எனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆணையாளர், பிரதி ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர் உட்பட சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகர சபையின் செயற்பாடுகளும் தேக்கமடைந்துள்ளன.
இது தொடர்பில் எனது பணிகளை மீண்டும் ஆரம்பித்ததும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.