November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டனர்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் சட்டமா அதிபரும் முன்னாள் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் சுபாசினி சேனாநாயக்க நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இதன்படி, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ், தற்போதைய நீதியரசர் திலீப் நவாஸ், மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சீ பெர்டினாண்டோ ஆகியோர் இலஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதேவேளை,இவர்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்து இவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து இவர்களை முழுமையாக விடுதலை செய்தது நீதிமன்றம்.

கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை வாங்கிய நிலம் தொடர்பாக சந்தேக நபர்கள் மீது கடந்த அரசாங்க காலத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.