புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலங்கையின் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு உலகத் தமிழர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வித சட்ட, அரசியல் அல்லது தார்மீக அடிப்படையும் இல்லை என்றும் ஐநா விதிமுறைகளை மீறும் செயலாகும் என்றும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தாம் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மேம்படுத்துவதிலும், இலங்கையின் எல்லா பகுதிகளிலும் புனர்வாழ்வு, நிவாரண முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தடை, நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் சுரேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகத் தமிழர் பேரவை, இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அரச சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும் சுரேன் சுரேந்திரன் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.