July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் இறுதி யுத்தத்தின் போதான இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை பிரிட்டன் வெளிப்படுத்துமா?’: ஜீ.எல்.பீரிஸ் கேள்வி

‘இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை பிரிட்டன் தூதரகம் வெளிப்படுத்துமா?’ என்று முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய கல்வி அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத் தலைமை தாங்கிய பிரிட்டன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான (2009 ஜனவரி முதல் மே மாதம் வரை) இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை பல வருடங்களாக மறைத்து வருவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதரகம் இறுதி யுத்தத்தின் போது, அந்நாட்டு வெளியுறவு அமைச்சுடன் மேற்கொண்ட இராஜதந்திர தகவல் பரிமாற்றங்கள், இலங்கை இராணுவத்தின் மீது பிரிட்டன் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுடன் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவும் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் மைக்கல் நெசபி இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை வெளியிடக் கோரியிருந்த நிலையில், பிரிட்டன் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்க பல வருடங்களாகப் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடான பிரிட்டன், குறித்த பேரவைக்கும் இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை என்றும் சட்டத்துறைப் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கையில் அமைக்கப்படும் ஐநா விசேட பிரிவுக்கேனும், கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் இந்தத் தகவல்களை வெளியிடுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.