July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம்’; பௌத்த தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

‘தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம்’ என தெரிவித்து முக்கிய பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கசப்ப தேரர், விமலஜோதி தேரர் உட்பட பல தேரர்களின் கையொப்பத்துடன் இக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபை தேர்தலை தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கட்சித் தலைவர்களை கூட்டி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்காலத்தில் தேர்தல் ஒன்று நடக்குமானால் அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என ஆனந்த தேரர் அண்மையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவில்லை என்றால், மகா சங்கத்தினரை ஒன்றினைத்து, போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்று ஓமல்பே சோபித தேரர் எச்சரித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் கடந்த தேர்தல்களில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு அரசாங்கம் நன்றிக் கடன் செலுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாகாண சபை முறைமையை ஒழிக்கப்பட்டு, உள்ளூராட்சி மன்றங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.