July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகளுக்கான தடை அமுலுக்கு வருகிறது!

இலங்கையில் நாளை முதல் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான உற்பத்திகள் மற்றும் விநியோகத்திற்குத் தடை விதிக்கப்படுவதாகச் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சினால் ஜனவரி மாதம் வெளியான நிலையில், நாளை தடை நடைமுறைக்கு வரவுள்ளது.

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அல்லது பொலித்தீனால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாபார அல்லது கைத்தொழில் நடவடிக்கைகளின் போது, பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் 20 மில்லி மீட்டர் அளவுக்கும் குறைவான அல்லது 20 கிராமுக்குக் குறைவான சிறிய பொதிகள் (சச்சட் பக்கட்) பயன்பாடு தடை செய்யப்படுகிறது.

அத்துடன் பலூன், பந்து மற்றும் நீரில் விளையாடக் கூடிய பொருட்கள் தவிர்ந்த காற்றடைக்கப்பட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் மற்றும் பிளாஸ்டிக் காம்புகளுடன் கூடிய கொட்டன் பட்ஸ்களுக்கும் இத்தடை அமுலாகின்றது.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சுற்றுச் சூழலில் சேர்வதனால், சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் நிலைகள் மாசடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பல நிறுவனங்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இருப்புகளை சந்தைப்படுத்துவதற்கு தொடர்புடைய தயாரிப்புகளுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அத்தோடு, இந்தப் பொருட்களின் ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, வருட இறுதிக்குள் மேலும் 350 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திப் பொருட்களுக்கான தடை குறித்து சுற்றாடல் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.