July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைகள் தேர்தலை கலப்பு முறையில் நடத்த அரசாங்கம் யோசனை

மாகண சபைகள் தேர்தலை தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதன்படி மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூல வரைபு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக கட்சித் தலைவர்களை கூட்டி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தொகுதிவாரியாக 70 வீத பிரதிநிதிகளையும், விகிதாசார அடிப்படையில் 30 வீத பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று ஒரு தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் போட்டியிடும் வகையிலும், மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு வழங்கப்படும் போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை ஒரு மாவட்டத்திற்கு இரண்டு ஆசனங்கள் என்ற ரீதியில் அதிகரிக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பாக சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும், இதன்படி விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த நடவடிக்கையெடுப்படவுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.