புதிய அரசமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது என அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. எனவே, மக்களின் உண்மையான ஆணையை பிரதிபலிக்க பொருத்தமான தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளை, சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது புதிய அரசமைப்பில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
புதிய அரசமைப்பை அமுல்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்தவும், கருவூலத்திலிருந்து நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதைக் கட்டாயமாக்கவும் ஒரு விதியைச் சேர்க்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.