July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவா தீர்மானம் அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளது’

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

தமிழ் மக்கள் மீதும் புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் கடும்போக்கான இனவாத செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.அதன்மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளதாகவே கருதமுடியும்.எனினும் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு தீர்வு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையில்லை.எனினும் பலம்பொருந்திய உலக நாடுகள் தமிழர்கள் தொடர்பாக கரிசனையுடன் இருப்பது வெளிப்பட்டுள்ளது.

நான் வெளிவிவகார அமைச்சருடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடிய வேளையில்,ஐ.நா.பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மனதளவில் அரசுக்கு இணக்கம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாத ரீதியான தோற்றப்பாட்டை காட்டினாலும் அரசாங்கத்தால் மனித உரிமைகள் பேரவையை மீறி செயற்படமுடியாது.அந்த தீர்மானத்தை இங்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசாங்கம் கூறுமானால், இலங்கைக்கு மேலும் நெருக்கடிகள் ஏற்படும்.

குறிப்பாக இந்த ஆட்சியை அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த சிங்கள மக்கள் தற்போது அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

தொல்பொருள் திணைக்களத்தின் ஆய்வுகளை நிறுத்த முடியாது என்று அதனுடன் தொடர்புடைய அமைச்சர் என்னிடம் கூறியிருந்தார்.எனினும் இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக தொல்பொருள்துறை சார்ந்த விரிவுரையாளர்களையும் அழைத்து எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் ஒரு கூட்டத்தினை நடத்தி கலந்துரையாடுவதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதேவேளை, அரசுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது;

எமது கட்சிக்கு ஊடக பேச்சாளர் என்று யாரும் இல்லை. அந்த பதவி கட்சியினால் உத்தியோகபூர்வமாக இன்னும் நியமிக்கப்படவில்லை.
அத்துடன் தந்தை செல்வா காலம் முதல் அனைத்து அரசுடனும் பேச்சுவார்த்தை செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் இலங்கை அரசால் தமிழர்களிற்கு தீர்வு வழங்குவதற்கான சாத்தியம் இல்லை. சர்வதேச நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் முழுமனதுடன் செயற்பட்டால் மாத்திரமே எமக்கு சாதகமான நிலைமை உருவாகும்.

ஜெனிவாவில் இந்தியாவினுடைய செயற்பாடு தமிழ் மக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. கடந்த முறை அரசுக்கு சார்பான வகையில் இந்தியா செயற்பட்டிருந்தது.இம்முறை வாக்களிப்பில் நடுநிலமை வகித்திருந்தாலும் தெளிவான விடயங்களை ஐ.நா.வில் பதிவு செய்திருக்கின்றது.தமிழர்களிற்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று ஒரு ஆசிய பிராந்தியத்தின் முக்கியமான நாடு மனித உரிமை பேரவையில் தனது பதிவினை வைத்திருப்பது எதிர்காலத்தில் தமிழர்களிற்கு சாதகமாகவே இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.