(Photo : Central bank)
5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இலங்கையில் புழக்கத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை குறிவைத்து குற்றச்செயலில் ஈடுபடுபவர்களினால் இவ்வாறு போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
5000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்படுத்தும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம், மோதர பிரதேசத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் 21 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்ட பலர் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.உங்கள் கைகளில் 5000 ரூபாய் நாணயத்தாள் கிடைத்தால் அதில் உள்ள குறியீடுகள் மற்றும் கறுப்பு நிற கோடு குறித்து ஆராயுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
சந்தேகத்தை ஏற்படுத்தும் நாணயத்தாள்கள் கையில் கிடைத்தால் அதனை இன்னொருவரிடம் மாற்ற முயலாது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.