வீதியில் லொறி சாரதி ஒருவரை கீழே தள்ளிவிட்டு, கடுமையாகத் தாக்கிய மஹகரம போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் வைத்து நபரொருவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் காணொளியொன்று இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் லொறி சாரதி ஒருவர் என தெரியவந்துள்ளது.
மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சாரதி போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது மோதி, காயத்தை ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.