இலங்கையில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஒரு இலட்சம் டெங்கு நுளம்புகள் சுற்றுச் சூழலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தவே இந்தத் திட்டம் முதன்முதலாக கம்பஹா கிகடகமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இவ்வாறு ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட நுளம்புகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பல வருடங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவாக, இவ்வாறு நுளம்புகளை சமூகத்திற்குள் விட நடவடிக்கை எடுத்ததாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துப் பீட பேராசிரியர் ஜானகி ஹேவாவசந்தி தெரிவித்துள்ளார்.
கருத்தடை செய்யப்பட்டுள்ள நுளம்புகள், பெண் நுளம்புடன் இணைந்தாலும் இனப்பெருக்கம் இடம்பெறாது என்றும் இதன்மூலம் நுளம்புப் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அருண ஜயசேகர கூறியுள்ளார்.
இது உலக நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை எனவும், இதன்மூலம் இலங்கையில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியுமென்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.