தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இணையதளம் மற்றும் யூடியுப் பக்கத்தில் தகவல்களைப் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களான இருவரும் யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இணையதளமொன்றில் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சந்தேக நபர்கள் பணியாற்றிய அலுவலகத்தை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து, அங்கிருந்த தகவல்கள் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமது யாழ்ப்பாண அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டியூப் தமிழ் இணையதளம் கூறியுள்ளது.