January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய இலங்கை- இந்திய அரசுகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெரும்பான்மை இன மீனவர்கள் கைது செய்யப்படும் போது, இலங்கை அரசாங்கமும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகமும் அவர்களது விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகவும், தமிழர்கள் விடயத்தில் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவ சமூகம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடயத்தைப் பார்த்து, விடுதலைக்கு வழிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை சிறையில் வாட அனுமதிக்கக் கூடாது. தமிழராக உள்ள மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் செல்வம் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.