October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு இந்த அரசாங்கத்தின் கீழும் சாத்தியமில்லை’: விஜயதாச ராஜபக்‌ஷ

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சித்தாலும், அது அவர்களால் முடியாத விடயம் என்பது உறுதியாகியுள்ளதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வரைவு நிபுணர் குழுவுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ செயற்பட்டு வரும் நிலையிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படாது என்பது 99 வீதம் உறுதியாகியுள்ளதாகவும், அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் தொடர்பில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள ஒரே இலங்கையன் என்ற வகையில் தான் புதிய அரசியலமைப்பு வரைவுப் பணியில் இணைந்து கொண்டாலும், இப்போது நம்பிக்கை இழந்துள்ளதாக விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அரசியலமைப்பை விசேட குழுக்களால் அல்லது ஆணைக்குழுக்களால் தயாரிக்க முடியாதென்றும், அரசியலமைப்பு சபையொன்றின் மூலமே உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், புதிய அரசியலமைப்புக்கான அடித்தளமேனும் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.