May 23, 2025 8:10:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“யாழ். மாவட்டத்தை முற்றாக முடக்குவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்”: இராணுவத் தளபதி

Shavendra-Silva-

ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில் தான் தங்கியுள்ளது எனவும், யாழ் மாவட்டத்தை முற்றாக முடக்குவது தொடர்பில் பொதுமக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் இராணுவத் தளபதியும் கொவிட் – 19 தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடடர்ந்து பேசிய அவர்;

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொவிட் தடுப்புக்காக அந்தந்த மாவட்டச் செயலர்கள் தலைமையில் மாவட்ட கொவிட் தடுப்புச் செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அமைவாக கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரத்தில் சில பகுதிகள் 10 நாட்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த கொவிட் தாக்கத்தால் வர்த்தகர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, முடக்கப்பட்ட நாட்களுக்குள் வர்த்தகர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கவேண்டும்.அதன் பின்னரே வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்.

எனவே, பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பஸ்ஸில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே. யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸுக்கு மேலும் 63 தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சுன்னாகத்தில் 29 பேருக்கும் யாழ்ப்பாண நகரப்பகுதியில் 23 பேருக்கும் கோப்பாயில் 23 பேருக்கும் என 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.