கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த, பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை ஆராயும் உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் இருந்து நீதியரசர் ஒருவர் விலகியுள்ளார்.
குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் ஆராயப்பட்ட போது, நீதியரசர்கள் குழாமை சேர்ந்த நீதியரசர் யசந்த கோதாகொட, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குழந்தை உயிரிழந்திருந்ததுடன், பின்னர் அந்தக் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாக பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியிலும், அதிகாரிகளினால் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வாறு குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டமை ஊடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பி.தெஹிதெனிய, காமினி அமரசேகர,யசந்த கோதாகொட மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டு வந்தது.
இதன்படி இன்றைய தினத்தில் மனு ஆராய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தான் இதிலிருந்து விலகிக்கொள்வதாக நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்துள்ளார்.
இதனால் அந்த மனு மீதான ஆராய்வு மே மாதம் 25 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.