ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ‘த மோர்னிங்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு பொறுப்புவாய்ந்த நாடு என்பதால், ஐநா தீர்மானத்தை எவ்வாறு முன்னேக்கி எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து தாம் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை அமுல்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்களை 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூலம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமல் போனார் தொடர்பாக அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்கள் முறையாகப் பணியாற்றுவதன் மூலமே, மக்களுக்கு திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படுவதை ஐநாவில் எடுத்துக்காட்ட முடியும் என்றும் வெளியுறவு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா பரிந்துரைகளில் சில அடைவுகளை எட்டும் போது, தமக்கான இலக்கை ஐநா முழுமையாக மாற்றி விடுவதாகவும் ஜயனாத் கொலம்பகே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் 12 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்துடன் தொடர்புடையதல்ல என்றும் இந்த வருடத்துடன் தொடர்புடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.