இலங்கையில் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை இரண்டாவது முறையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் புற்றுநோயை ஏற்படுத்தும் “எப்போலடெக்ஸின்” இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனையை மேற்கொண்ட இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த தேங்காய் எண்ணெய்யை முழுமையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்ய உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தேங்காய் எண்ணெய்யை சந்தையில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே “எப்போலடெக்ஸின்” பெரியவர்களை விட குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பை கொண்டுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
“எப்போலடெக்ஸின்” அசுத்தமான தேங்காய் எண்ணெய்யின் தாக்கம் பேரழிவிற்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுவாக இந்த இரசாயனம் சிறுநீரகங்களைப் பாதிக்கின்ற அதேவேளை, இறுதியில் அவை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம். நீண்ட காலமாக அல்லது திடீரென பெரிய அளவில் இந்த இரசாயனம் உள்ளெடுக்கப்படுவதால் அவர்களுடைய வளர்ச்சியில் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்” எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்யில் 80% அசுத்தமானவை என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் உலகின் மிகச் சிறந்த சமையல் எண்ணெய்களில் ஒன்றாகும். இருப்பினும், இலங்கை மக்கள் இப்போது அசுத்தமான தேங்காய் எண்ணெய்யையே உட்கொள்கின்றனர். இது ஒரு பொது சுகாதார நெருக்கடியாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்களின் 100 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.