November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இழப்புகளை சந்தித்தாலும் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்காது’

இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதால் நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எகிப்தின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கான அடுத்த எரிபொருள் தொகுதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வரவுள்ளதாகவும், சூயஸ் கால்வாய்க்கு அருகிலுள்ள எந்த துறைமுகத்திலிருந்தும் அல்ல” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்களின்படி, சூயஸ் கால்வாயைத் தடுக்கும் ‘எவர் கிவன்’ கொள்கலன் கப்பலை அகற்ற பல வாரங்கள் ஆகக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் சர்வதேசத்தில் கச்சா எண்ணெயின் விலை சுமார் இரண்டு சதவீதத்தினால் உயர்ந்துள்ளது.

இது கச்சா எண்ணெய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் உலகளாவிய விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாவது நாளாக தொடரும் இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.
இந்த நிலையில் அரசாங்கம் சவால்களுக்கு முகம்கொடுத்திருக்கின்ற போதிலும் எதிர்வரும் வாரங்களில் எண்ணெய் விலையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை என்றும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதியாக செப்டம்பர் 1, 2019 அன்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இழப்புகளைச் சந்தித்தாலும் அரசாங்கம் விலைகளை அதிகரிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கிப் புறப்பட்ட 400 மீட்டர் நீளமான எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் செவ்வாயன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியதையடுத்து உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பக்கச் சுவர்களையும் விரிவாக்கி, கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

கப்பலை வெளியேற்றுவதற்கு “வாரங்கள்” ஆகலாம் என்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த கொள்கலன் கப்பலை வர்த்தக பாதையிலிருந்து நகர்த்தும் பணிகள் வெற்றியடைந்துவருவதாக கடல்சார் சேவை வழங்குநர் இஞ்ச்கேப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.