November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன, ரஷ்ய தடுப்பூசிகளை வாங்குவதற்கு இலங்கை நடவடிக்கை; இந்தியாவில் இருந்து இறக்குமதியை கைவிட முடிவு?

Vaccinating Common Image

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான ‘சைனோபார்ம்’ மற்றும்’ஸ்புட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பயன்படுத்த ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இம்மாத இறுதியில் சீனாவிடம் இருந்து ஆறு இலட்சம் “சைனோபார்ம்” தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும்,வெகு விரைவில் ரஷ்யாவிடமிருந்து 13 மில்லியன் “ஸ்புட்னிக்” தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் தேவைக்கேற்ப அதிக தொகை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமை என்பவற்றை காரணமாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார தரப்பினர், விரைவில் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொவிட்-19 அச்சுறுத்தல் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் தொடர்ந்தும் தடுப்பூசிகளை போடும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் தயாரிப்பானதும் தற்போது இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் “ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா” தடுப்பூசிகளையே நாம் பயன்படுத்தி வருகின்ற போதிலும் சகலருக்கும் இந்த தடுப்பூசிகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் தயாரிப்பான “சைனோபார்ம்” தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் தயாரிப்பான “ஸ்புட்னிக்” தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

.ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள “சைனோபார்ம்” தடுப்பூசிகளை இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரவுள்ளதாகவும், முதல் கட்டமாக ஆறு இலட்சம் தடுப்பூசிகள் சீன அரசாங்கம் இலவசமாக இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்,ரஷ்யாவின் கமீலியா நிறுவனம் தயாரிக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளையும் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய 13 மில்லியன் (130இலட்சம்) தடுப்பூசிகள் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலுக்கும் தெரிவித்தார்.