January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய உயர்ஸ்தானிகர் வித்யாலங்காரா பிரிவெனா பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

(Photo : Twitter/indian embassy in sri lanka)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொறகொடவுடன் பேலியகொடை வித்யாலங்காரா பிரிவெனா பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது,1940 ஆம் ஆண்டில் வித்யாலங்காரா  பிரிவெனாவிற்கு இந்தியா நன்கொடையளித்த புத்தர் சிலையை இவ்விருவரும் தரிசித்துள்ளனர்.

பிரிவெனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று தொடர்புகளை புதுப்பித்தல் மற்றும் இந்த நெருக்கமான பிணைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உயர்ஸ்தானிகரின் இந்த விஜயம் அமைந்திருந்தது.

வித்யாலங்காரா பிரிவெனா மற்றும் இந்தியாவில் இதே போன்ற நிறுவனங்களுக்கு இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி இணைப்புகளை புதுப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவை பல்வேறு மட்டங்களில் வளர்ப்பதில் கருவியாக செயற்பட்ட இலங்கையின் முதன்மையான கற்றல் மையங்களில் ஒன்று வித்யாலங்காரா பிரிவெனா என்பதை உயர்ஸ்தானிகர் ஒப்புக் கொண்டார்.

1944 ஆம் ஆண்டில், வித்யாலங்காரா பிரிவெனாவின் முதலாவது மாநாட்டின் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பிரிவெனாவிற்கு “வித்யாகக்ராவரி” என்ற பட்டத்தை வழங்கினார்.

1959 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதலாவது குடியரசின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் வித்யாலங்காரா பல்கலைக்கழக திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

வித்யாலங்காரா  பிரிவெனாவை பார்வையிட்ட இந்திய பிரபலங்களில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அடங்குவர்.