November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 370 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்
12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத் தர் ஒருவருக்கும், தாதிய மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல்,வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இம்மாதம் 300 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 300 இற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் யாழில் சுயதனிமைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரப் பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதுடன் யாழ்., திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 143 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மற்றும் அதற்கு அண்மையிலுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய திருநெல்வேலி, கோண்டாவில் கிழக்கு, பாற்பண்ணை வீதி. நல்லூரின் ஒரு பகுதி உட்பட்ட பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறவும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.