November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எம்.பி. ஆவதற்கு வாக்களிக்கும் தகுதி மாத்திரமே போதும்”; கல்வித் தகைமைகளை வெளியிட பாராளுமன்றம் மறுப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக  அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் கல்வித் தகைமைகளை வெளியிட பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு, சண்டே டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களைக் கோரியுள்ள நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள நாடாளுமன்றத்தின் உதவி பொதுச்செயலாளரும் தகவல் அதிகாரியுமான டிக்கிரி ஜயதிலக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் அவரவரின் தனிப்பட்ட தகவல் என தெரிவித்துள்ள அவர், நியாயமான காரணங்கள் இன்றியும் அவர்களின் ஒப்புதல் இல்லாமலும் இவ்வாறான தகவல்களை வெளியிடுவது சிக்கலைத் தோற்றுவிக்கும் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கை அரசியலமைப்பின் 90 ஆவது பிரிவின்படி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான கல்வித் தகைமை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என கூறியுள்ள அவர், இதன்படி, எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி, அவர் அல்லது அவள் ஒரு வாக்காளராக இருப்பதே என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,எம்.பி.க்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக வினவப்பட்ட போது அது குறித்த ​​தகவல் பாராளுமன்றத்தின் வசம் இல்லை என்றும் டிக்கிரி ஜயதிலக  கூறியுள்ளார்.

எனினும் சண்டே டைம்ஸின் ஏனைய கேள்விகளுக்கு பதிலளித்த ஜயதிலக, எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட நிதி நன்மைகள், சேவைகள் மற்றும் வசதிகள் குறித்த விவரங்களை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு எம்.பி.க்கும் மாதாந்த உதவித்தொகை ரூ .54,285 மற்றும் அலுவலக பராமரிப்பிற்காக ரூ .100,000 மாத கொடுப்பனவாக வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றக் கூட்டங்கள் மற்றும் கமிட்டி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாள் ஒன்றுக்கு ரூ .2,500 சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி ஒருவருக்கு தபால் வசதிகளுக்காக ஆண்டுக்கு ரூ .350,000 வழங்கப்படுவதுடன் நிலம் மற்றும் கைத்தொலைபேசிகளுக்கு மாதாந்தம் ரூ .50,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

எம்.பி.ஒருவருக்கு அரசாங்கத்திடமிருந்து வாகன சாரதி வழங்கப்படாவிட்டால், ரூ .3,500 மற்றும் ரூ .1,000 உடன் பொழுதுபோக்கு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்திலிருந்து எம்.பி.யின் தேர்தல் மாவட்டத்திற்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,ஒரு எம்.பி. பாராளுமன்ற அமர்வின் போது ஒரு தினத்தில் அதிகபட்சம் பன்னிரண்டு பார்வையாளர்களை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து வர முடியும் என்றும் அதற்கான பணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.