திருகோணமலை,சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவனை முதலை இழுத்துச்சென்றிருந்த நிலையில்,குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்- பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இரண்டு சிறுவர்களுடன் இத்திக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது குறித்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் அச்சிறுவனுடன் சென்ற மற்றைய சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தகவலைக் கூறியதையடுத்து, சிறுவனின் தந்தை, தன்னுடைய மகனை முதலை இழுத்துச் செல்வதை அவதானித்ததாக பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காணாமல் போயிருந்த சிறுவன், முதலை கடித்த நிலையில் கிராம மக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஹசலாகாவில் மகாவேலி ஆற்றில் குளிக்கச்சென்ற 43 வயது தந்தையும் அவரது 13 வயது மகனும் காணாமல் போயுள்ள நிலையில்,மகனின் சடலம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அதேவேளை, தந்தையை கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் பண்டிகை காலங்களில் முதலைகளின் தாக்குதல்கள் மற்றும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் குளிக்கும் போது நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.