January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

7 புலம்பெயர் அமைப்புகள், நூற்றுக் கணக்கான நபர்கள் மீண்டும் இலங்கையின் தடைப் பட்டியலில்

உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட வெளிநாடுகளில் இயங்கும் 7 புலம்பெயர் அமைப்புகளையும், 300 ற்கும் மேற்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை விதித்து கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ணவினால் இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளிவந்துள்ளது.

‘1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம்’ என்ற தலைப்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2016 நவம்பர் 9 ஆம் திகதிய 1992/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின் நிரல் இதில் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புக்களே மீண்டும் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை தடை செய்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் 300 ற்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பான விபரங்களும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் புலம்பெயர் அமைப்புகள் பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகளின் தடை நீக்கப்பட்டிருந்தது.

அதேவேளை 269 நபர்களுக்கான தடையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் குறிப்பிட்ட அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு தடைவிதிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.

முழுமையான வர்த்தமானி அறிவித்தலை இந்த இணைப்பில் பார்வையிடலாம்