May 25, 2025 3:54:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1500 நாட்களை எட்டிய போராட்டம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு பேரணி

வவுனியாவில் சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியுள்ளதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து ஆரம்பமான பேரணி,மணிக்கூட்டு சந்தியினூடாக வந்து உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் இடத்தில் நிறைவடைந்தது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?’ போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து பேரணியில் கலந்து ஈடுபட்டிருந்தனர்.