July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சூயஸ் கால்வாய் தடையினால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கும்’

எகிப்தின் சூயஸ் கால்வாய் ஊடான  கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இலங்கை கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கிப் புறப்பட்ட 400 மீட்டர் நீளமான எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் செவ்வாயன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியதையடுத்து உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பக்க சுவர்களையும் விரிவாக்கி, கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

கப்பலை வெளியேற்றுவதற்கு “வாரங்கள்” ஆகலாம் என்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கு இலங்கையின் ஏற்றுமதிகள் சூயஸ் கால்வாய் வழியாக முன்னெடுக்கப்பட்டுவருவதால் இந்த முடக்கமானது இலங்கையின் அந்நியச் செலாவணியில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தில் 60-70 சதவிகிதம் சூயஸ் கால்வாயின்  வழியாகக் கொண்டு செல்லப்படுவதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த திடீர் விபத்து காரணமாக ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் ஏராளமான வணிகக் கப்பல்கள் குவிந்து, நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சூயஸ் கால்வாயின் பழைய பயணப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாய் முடக்கம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலையிலும் அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.